சென்னை: நிவர் புயல் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரை உள்பட பல்வேறு கடற்கரை சாலைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, கடற்கரை சாலைகளில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மேலும் தீவிரம் அடைந்து அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடற்கரையோர ஊர்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி வருவாய்த்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் குடிகாடு, சித்திரைப்பேட்டை, ஐயம்பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர ஊர்களில் வாழும் மீனவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் வருவாய்த்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையிலும், கடற்கரை பகுதிகளில் வாகனப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர், எண்ணூர் நெடுஞ்சாலை உள்பட கடற்கரை சாலைகள் மூட சென்னை காவல்துறை ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.
நிவார் சூறாவளி கடலோரப் பகுதிகளைக் கடக்க வாய்ப்புள்ளதாலும், புயல் கரையை கடக்கும் போது 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் சென்னை காமராஜ் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தம் செய்யப்பட்டு கடற்கரை சாலைகளில் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.