புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆலோசகர்களின் மையங்களிடம் வலியுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
தற்போது உலகின் பல நாடுகளில், கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வர, தயாராகிவிட்டதாய் கூறப்படுகிறது. சில நாடுகளில், தடுப்பு மருந்து விநியோக மையங்களும் ஏற்படுத்தப்பட்டுவிட்டன.
பல நாடுகள், அவசரகால தேவையாக, 90% வரை பயனளிக்கும் தடுப்பு மருந்துகளுக்கு அங்கீகாரம் வழங்க தயாராகிவிட்டன.
இந்நிலையில், தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்வோருக்கு நேரும் பக்க விளைவுகள் குறித்து அவர்களுக்குத் தெளிவாக விளக்கப்படுவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள்.
அமெரிக்காவின் சில மாகாணங்கள், டிசம்பர் மாத துவக்கத்திலேயே, தடுப்பு மருந்தை விநியோகம் செய்வது குறித்து திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில்தான், மருத்துவர்களிடமிருந்து இந்த முக்கியமான அறிவுறுத்தல் வந்துள்ளது.
ஏனெனில், கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட சில பக்க விளைவுகள் நிகழலாம் என்று கூறப்படுகிறது.