நடன இயக்குநராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய பிரபுதேவா, குறுகிய காலத்தில் அடுத்தடுத்த உயரங்களை எட்டினார்.
‘’காதலன்’’ படத்தில் பிரபுதேவாவை, கதாநாயகனாக ஷங்கர் அறிமுகம் செய்தார். இதன் பின்னர் பல தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
விஜய் நடித்த போக்கிரி படத்தை டைரக்ட் செய்த அவர் ஏராளமான இந்தி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருக்கும், ரம்லத் என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
நடிகை நயன்தாராவை காதலித்த பிரபுதேவா, அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் ரம்லத்தை பிரிந்தார். ஆனால் என்ன காரணத்தாலோ பிரபுதேவா- நயன்தாரா திருமணம் நடைபெறவில்லை.
இந்நிலையில் பிரபுதேவா, மும்பையை சேர்ந்த பிசியோதெராபி டாக்டரான ஹிமானி என்பவரை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த கல்யாணத்தை பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் உறுதி செய்துள்ளார்.
சென்னையில் பெற்றொர் முன்னிலையில் பிரபுதேவா – ஹிமானி திருமணம் மே மாதம் நடந்துள்ளது. அப்போது கொரோன பரவல் உச்சத்தில் இருந்ததால், உறவினர்கள் மற்றும் நண்பர்களை இந்த திருமணத்துக்கு அழைக்கவில்லை.
மும்பையில் இந்தி படப்பிடிப்பில் பிரபுதேவா ‘பிசி’யாக இருந்தபோது அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிகிச்சை பெற டாக்டர் ஹிமானியின் மருத்துவமனைக்கு சென்றபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, கல்யாணத்தில் முடிந்துள்ளது.
– பா. பாரதி