கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, திமுகவிடம் “நாங்கள் அதிகமாகவும் கேட்க மாட்டோம். குறைவாகவும் பெறமாட்டோம். தேவையானதைப் பெறுவோம். அதுதான் தமிழ்நாடு காங்கிரஸின் கொள்கை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம்நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று கோவை, கருமத்தம்பட்டியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் விவசாய பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. முன்னதாக, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் ஏர்கலப்பையோடு பேரணியாக செல்ல முயற்சித்தனர். ஆனால், அனுமதியின்றி பேரணிக்கு அனுமதி கிடையாது என மறுதத காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து பின்னர் விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து, மாலை விவசாய பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில், தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சிறப்புரையாற்றினார். அப்போது,“பரஸ்பர புரிதல் மற்றும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது காங்கிரஸ்-திமுக கூட்டணி. மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.மேலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவெல்லபிரசாத் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆகியோரும் உரையாற்றினர்.
இறுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி உரையாற்றும்போது, தேர்தல் கூட்டணியின்போது, “நாங்கள் அதிகமாகவும் கேட்க மாட்டோம். குறைவாகவும் பெறமாட்டோம். தேவையானதைப் பெறுவோம். அதுதான் தமிழ்நாடு காங்கிரஸின் கொள்கை” என விளக்கியவர். காங்கிரஸிடம் பணம் இல்லாமல் இருக்கலாம், ஆனால், சுயமரியாதையுள்ள கட்சி. காங்கிரஸ் தற்போது புதிய பாதையில் பயணிக்கிறது. மோடியை வீழ்த்த மாபெரும் வீரனான ராகுல் காந்தியால் மட்டும்தான் முடியும்” என்றும், “நேருவுக்கு கடவுள், மதம் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், இந்த இரண்டின் மீதும் நம்பிக்கை கொண்ட காந்தியின் சீடராகவே நேரு இருந்தார். அதுதான் ஜனநாயகம்.
பாஜகவினரின் கடவுள் பக்தி உண்மை என்றால் வேல் இல்லாமல் முருகன் சிலையுடன் அவர்கள் செல்ல வேண்டும். அப்படி சென்றால் நாங்களும் வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.