சென்னை: கடுமையான களேபரங்களுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்படுகிறது.  அதைத்தொடர்ந்து முடிவும் இன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சங்கத்தை கைப்பற்றப்பாவது யார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிய வரும்.

தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காணரமாக,  முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கியுள்ளனர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார்கள். இதில் பதவியில் உள்ள நிர்வாகிகள் யாருமே, தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடவில்லை.

இந்த நிலையில், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தரும், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, தேனப்பன் பி.எல். ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.  இதில் பி.எல்.தேனப்பன்  சுயேச்சையாக  போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இதில் ஜே.சதீஷ்குமார் சுயேச்சையாக  தனியாகப் போட்டியிடுகிறார். மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஒருதரப்பினர் பணம் கொடுப்பதாகவும், மற்றொரு தரப்பினர் தங்க நாயணம் கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இருந்தாலும் களேபரத்துக்கு மத்தியில் தேர்தலும் நடைபெற்றுமுடிந்தது.

இதையடுத்து,  அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் இன்று  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இந்த தேர்தலில் வாக்களிக்க ஆயிரத்து 303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 10 50 பேர் மட்டுமே  வாக்களித்தனர்.  ரஜினிகாந்த், தனுஷ், பாரதிராஜா உள்ளிட்டோர் வாக்களிக்கவில்லை. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  சங்கத்தை கைப்பற்றப்போவது  டி.ராஜேந்தர்  அணியா அல்லது தேனான்டாள் பிலிம்ஸ் முரளியா என்பது விரைவில் தெரிய வரும்.