சென்னை: நிவர் புயல் எதிரொலியாக, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் வரும் 25ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுப்பெற்றுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி, வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.
இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயல் சின்னமாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு நிவர் என்றும் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
புயலானது வரும் 25ம் தேதி நண்பகல் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக டெல்டா, உள்தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு 24 மற்றும் 25 தேதிகளில் மிக கனமழை முதல் உச்ச உயர் தீவிர மழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால், புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், , ராணிப்பேட்டை, திருவண்ணாமலை திருப்பத்தூர்,வேலூர் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வரும் 25ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 22ம் தேதி மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 60 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
நவம்பர் 23ம் தேதி மணிக்கு 45-55 கிமீ வேகத்திலும், அதிகபட்சம் 65 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 24 அன்று மணிக்கு 55-65 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக 75 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதி மணிக்கு 80-90 கிமீ வேகத்திலும் அதிகபட்சம் 100 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
வட தமிழக கடலோர பகுதிகளான கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை நவம்பர் 22ம் தேதி மாலை 5.30 மணி முதல் 25ம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி வரை கடல் சீற்றமாக இருக்கக்கூடும். அதே போன்று தென் தமிழக கடலோர பகுதிகளான கொளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நவம்பர் 22ம் தேதி மாலை 5.30 மணி முதல் 25ம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலையின் உயரம் 4.9 அடி முதல் 9.8 அடி வரை கடல் சீற்றமாக இருக்கக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென தமிழக பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தி உள்ளது.