சென்னை

மிழக முதல்வரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளன.   திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் தனது பிரசாரத்தை தொடங்கிய போது தமிழகக் காவல்துறை அவரை கைது செய்து பின்பு விடுவித்தது.

இந்நிகழ்வு திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.  பல மூத்த தலைவர்கள் அதிமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.    இந்நிலையில் திமுக சார்பில் தமிழகத்தின் பல இடங்களில் தமிழகத்தை மீட்போம் என்னும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த கூட்டம் சேலத்தில் 500க்கும் அதிகமான இடங்களில் நடந்தது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் காணொளி மூலம் உரையாற்றும் போது, “திமுக அரசியல் செய்தால் மட்டுமே அரசு புதிய திட்டங்களை அறிவிக்கிறது.  அவ்வகையில் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்புக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.  ஆனால் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்னும் அறிவிப்பை முன்பே ஏன் வெளியிடவில்லை?   திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கைகள் மூலமாக வெளிப்படுத்திய பிறகே அரசின் அறிவிப்புக்கள் வெளி வருகின்றன.

தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியைத் தடுக்க நினைக்கிறார்.  அவரால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிச்சயமாக திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.