குவஹாத்தி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடல்நிலை, மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் உடல்உறுப்புகளின் செயல்பாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அஸ்ஸாம் மாநில சுகாதார அமைச்சர் டாக்டர்.ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல் உறுப்புகளை மீண்டும் சீராக இயங்க வைக்கும் வகையில், மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது 86 வயதாகும் தருண் கோகோய், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார் என்றும், தற்போது கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளால் அவர் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. அடுத்த 48-72 மணிநேரங்கள் அவரின் உடல்நிலையில் மிக முக்கிய தருணம் என்று தெரிவிக்கப்படுவதோடு, அவரின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2001 முதல் 2016 வரை, தொடர்ந்து 15 ஆண்டுகள், காங்கிரஸ் சார்பாக, அஸ்ஸாம் மாநில முதல்வராக இருந்தவர் தருண் கோகோய் என்பது குறிப்பிடத்தக்கது.