பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் மகளுக்கும், மறைந்த காஃபிடே அதிபர் மகனுக்கும் நிச்சயதார்த்தம் வெகுசிறப்பாக நடைபெற்றது. கர்நாடக மாநில முதல்வர்  எடியூரப்பா நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது நீண்ட கால நண்பரான மறைந்த சித்தார்த்தா குடும்பத்துடன் சம்பந்தம் பேசி முடித்துள்ளார். இந்த இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நண்பர்களாக தொடர்ந்த நிலையில், தற்போது சம்பந்தியாக மாறி உள்ளனர்.

‘காஃபி டே’ என்ற இந்தியாவின் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை எழுப்பியவர்தான் கர்நாடகாவைச் சேர்ந்த வி.ஜி.சித்தார்த்தா. இவர் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் மருமகன் ஆவார். கடன் தொல்லை உள்பட சில  பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சித்தார்த்தா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவரின் மரணத்தில் பல்வேறு  சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில்,  காஃபி டே அதிபர் சித்தார்த்தா வீட்டில் கெட்டிமேள சத்தம் ஒலிக்க இருக்கிறது.  சித்தார்த்தாவின் மகன் அமர்த்தியா ஹெக்டேவுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான  டி.கே.சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. சித்தார்த் உயிருடன் இருந்தபோதே அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அவரது மறைவு காரணமாக, நிச்சயதார்த்தம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது, இரு குடும்பத்தினரிடையே வெகு விமரிசையாக நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு இரு குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா   நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

அமர்த்தியா ஹெக்டே ஐஸ்வர்யா திருமணம், அடுத்த ஆண்டு, பிப்ரவரி 19ம் தேதி,  பேலஸ் கிரவுண்டில் விமரிசையாக நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது,  ‘காபி டே’ வியாபாரத்தை, மறைந்த சித்தார்த்தாவின் மகன்  அமர்த்தியா கையாண்டு வருகிறார்.   டி.கே.சிவக்குமார் நிறுவிய பொறியியல் கல்லூரியான ‘குளோபல் அகாடமி ஆஃப் டெக்னாலஜி’யை ஐஸ்வர்யா நிர்வகிக்கிறார். எஸ்.எம்.கிருஷ்ணா சிவக்குமாரின் அரசியல் தந்தையாக பார்க்கப்படுபவர். கிருஷ்ணாவின் உதவியாளராக இருந்துதான் சிவக்குமார் இந்த நிலைக்கு வந்துள்ளார். இதனால் இந்தத் திருமணம் இரு குடும்பத்திற்கும் இடையேயான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.