பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகைகள் ஏதும் கிடையாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். சசிகலா விரைவில் விடுதலையாவார் என அவரது உறவினர்களும், வழக்கறிஞரும் கூறி வந்த நிலையில், அமைச்சரின் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் குற்றவாளிகள் என பெங்களூர் தனி நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் நால்வருக்கும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், பத்து கோடி ரூபாய் அபராதமும் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கினார். தனி நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதற்கிடையில் ஜெயலலிதா காலமானதால், மற்ற 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் சிறை வாசம் 2021 ஜனவரியுடன் முடிவடைய உள்ளது. இதையொட்டி, அவர் செலுத்த வேண்டிய அபராத தொகையான ரூ.10.10 கோடியை அவரது உறவினர்கள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளனர்.
இதையடுத்து, அவரை சிறை நன்னடத்தை விதிகளின்படி முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் சிறை நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ பொம்மை, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை என்று தெரிவித்து உள்ளார். மேலும், நீதிமன்ற தீர்ப்பின்படியும் சிறைச்சாலை விதியின் படியும் மட்டுமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று கூறியுள்ளார். அவரது கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், சசிகலாவுக்கு அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியதால் மட்டும் அவரது விடுதலை உறுதியாகிவிடாது என வழக்கறிஞர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலாவுக்கான அபராதத் தொகைக்கு மூன்று பேர் டி.டி-களை வழங்கியிருக்கிறார்கள். அப்போது நீதிபதி “இந்த மூவரும் சசிகலாவுக்கு எந்த வகையில் பணம் செலுத்துகிறார்கள்” என்று குறுக்குக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். `ஏற்கெனவே அளிக்கப்பட்ட குன்ஹா தீர்ப்பில் தங்கள் வசமுள்ள நகைகளை விற்று பணத்தைக் கட்டச் சொல்லியிருந்தார்கள். அந்தமுறையில் இப்போது ஏன் பணத்தைக் கட்டவில்லை?’ என்கிற ரீதியில் கேள்விகளை நீதிபதி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அபராதத் தொகையை சசிகலா தரப்பு கட்டினாலும், அவரது விடுதலை விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பணம் கட்டியவர்கள் குறித்து, வருமான வரித்துறை விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்த பிறகே அவர் விடுதலையாவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தான் கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.