டெல்லி: ஆஸ்துமாவால் அவதிப்படும் சோனியாகாந்தி விரைவில் வேறு மாநிலத்திற்கு மாறும்படி அவருக்கு சிசிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசு காரணமாக, அவர் உடல்நலப் பாதிப்பில் இருந்துவிடுபட சூடான பகுதிகளுக்கு இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார் சோனியாகாந்தி. இவர் பல ஆண்டுகாலமாக ஆஸ்த்துமா உள்பட பல்வேறு உடல்உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். முதன்முதலாக கடந்த 2008ம் ஆண்டு அவர் ஆஸ்த்துமாக காரணமாக ஏற்பட்ட மூச்சுதிணறல் காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து அவ்வப்போது அவருக்கு ஆஸ்த்துமா நோய் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஆஸ்த்துமா நோயில் இருந்து விடுபட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இருந்தாலும், டெல்லியில் உயர்ந்து வரும் காற்றுமாசு காரணமாக, அவருக்கு பாதிப்பு தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் வாடிக்கையாக உள்ளது. நோய் பாதிப்பு காரணமாக, அவர் தேர்தல் பொதுக்கூட்டங்கள் போன்றவைகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களிலும் பரப்புரை மேற்கொள்வதை தவிர்த்தார்.
தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பிறகு, காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளதால், அங்கு மக்கள் சுவாசிக்கவே கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தலைநகர் டெல்லி மக்கள் வாழ்வதற்கே லாயக்கற்ற மாநிலமாக மாறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே ஆஸ்த்துமா மற்றும் நுரையீரர் தொற்று காரணமாக அவதிப்பட்டு வரும் சோனியாகாந்தி, டெல்லியை விட்டு அகன்று சூடான பிரதேசங்களான கோவா அல்லது சென்னையில் தங்கியிருக்க அவரது மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.
இதனால் சோனியாகாந்தி விரைவில், தனது மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தியுடன் வேறு பகுதிக்கு தற்காலிகமாக இடம் மாறுதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.