டெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா உச்சம்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக 131 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, மீண்டம் லாக்டவுன் கொண்டுவருவது குறித்து, முதல்வர் கெஜ்ரிவால் இன்று அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு 5,03,084 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,486 புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதுவரையில்லாத வரையில் அதிகபட்சமாக 131 பேர்  பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 7,943ஆக அதிகரித்து உள்ளது.  அதேவேளையில் 6,901 தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 4,52,683 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில்,  42,458  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துர்கா பூஜை, சாத்பூஜை, தீபாவளிப் பண்டிகை போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்காமல் கூடியது, காற்று போன்ற செயல்களால், தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளதாகவும்,  கடந்த 11-ம் தேதி அதிகபட்சமாக 85 பேர் உயிரிழந்தனர், அதையடுத்த 18ந்தேதி மிகஅதிகப்பட்டமாக இதுவரை இல்லாத அளவுக்கு 131 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக  மக்கள் நெருக்கமான பகுதிகளில் லாக்டவுனை அறிவிக்க அனுமதியளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,   டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் எண்ணிக்கை 660 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், லாக்டவுன் தேவையில்லை, ஆனால், கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம், இதன் மூலம் வைரஸ் பரவல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   “ டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இறுதியாண்டு மருத்துவம் படிக்கும் மாணவர்கள், மருத்துவர்களுக்கு துணையாக 8 மணிநேரம் பணியாற்றினால் ரூ.1000 , 12 மணிநேரம் பணியாற்றினால் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்” என அறிவித்து உள்ளது.

தேசிய நோய்தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், “ டெல்லியில் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பேர் கொரோனாவில் விரைவில் பாதிக்கப்படுவார்கள். அதற்கு ஏற்றார்போல் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்துவரும் பனிக்காலத்தில் நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும். அதற்கு தேவையான ஆக்ஸிஜன் சப்ளே, வென்டேலேட்டர் உதவிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என டெல்லி மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.