சென்னை: மெரினா கடற்கரையை தமிழக அரசு திறக்காவி்ட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறபிக்கும் என சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெரினா மீன் அங்காடிகளை முறைபடுத்துவது  தொடர்பான வழக்குகள் கடந்த 11ந்தேதி விசாரிக்கப்பட்டது. அப்போது,  மெரினா திறப்பது குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். அதற்கு பதில் அளித்த தமிழகஅரசு,  நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லை என கூறியது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அனைத்து பொழுதுபோக்கு இடங்களும் திறக்கப்பட்ட நிலையில், மெரினாவை திறப்பதில் என்ன பிரச்சினை என்றும், மெரினாவை  திறப்பது குறித்து சென்னை மாநகராட்சியும், தமிழக அரசு விரைவில்  முடிவு எடுக்கவேண்டும், இல்லையேல் நீதிமன்றமே  முடிவு செய்யும் என்று கூறி வழக்கை  நவம்பர் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது,  தமிழகஅரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மெரினா கடற்கரை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்பட விட்டால் நீதிமன்றமே திறக்க நேரிடும் என கூறியது.

மேலும்,  மெரினாவில் தள்ளுவண்டிகள் டெண்டர்கள் அமைப்பது குறித்த நடவடிக்கை மீதான தடையை விலக்கிக் கொண்ட நீதிமன்றம் அந்த டெண்டரில் 900  தள்ளுவண்டிகளை அமைப்பது தொடர்பான  நடவடிக்கை தொடரலாம் என உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 03-ம் தேதி ஒத்திவைத்தது