துபாய்: ஐசிசி அமைப்பிற்கான தலைவரை தேர்வுசெய்வதற்கான நடைமுறை துவங்கிவிட்டது. தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், மொத்தம் 3 சுற்றுகளாக தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கான போட்டியில், நியூசிலாந்து நாட்டின் கிரெக் பார்க்லே மற்றும் சிங்கப்பூரின் இம்ரான் குவாஜா ஆகியோர் உள்ளனர்.

ஐசிசி அமைப்பின் வாரிய இயக்குநர்கள் மொத்தம் 16 பேர். அவர்களில் முழுநேர உறுப்பினர்கள் 12 பேர், இணைப்பு நாடுகளின் உறுப்பினர்கள் 3 பேர் மற்றும் ஒரு சுதந்திரமான பெண் உறுப்பினர்(பெப்சிகோ நிறுவனத்தின் இந்திரா நூயி).

இந்த 16 இயக்குநர்களில், குறைந்தபட்சம் 11 பேரின் வாக்குகளைப் பெறக்கூடியவர்தான் ஐசிசி தலைவர் பதவியில் அமர முடியும். அதாவது, மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற வேண்டும்.

முதல் சுற்று வாக்கெடுப்பில், இந்த எண்ணிக்கையை யாரும் பெறவில்லை எனில், இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். அதிலும் மெஜாரிட்டி கிடைக்காதபோது, மூன்றாவது சுற்று வாக்கெடுப்பில் தலைவர் தேர்வு செய்யப்படுவார்.