மும்பை :

மெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தனது அரசியல் பயணம் குறித்து “ஏ பிராமிஸ்டு லேண்ட்” என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.

அதில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் குறித்து கருத்து கூறி இருக்கிறார்.

“ராகுல் பதற்றமானவர்” என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஒபாமா. தேவை இல்லாமல் சில வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

இந்த செய்திக்கு ஊடகங்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் அளிப்பதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ராகுலை விமர்சனம் செய்த ஒபாமாவுக்கு மகாராஷ்டிர மாநில ஆளுங்கட்சியான சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் “இந்திய தலைவர்கள் வெளிநாட்டு தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்வதில்லை. அப்படி இருக்கும் போது ஒபாமாவின் கருத்து ரசிக்கும் படியாக இல்லை” என கூறியுள்ளார்.

“அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அறிவிலி என நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?” என்றும் அவர் ஆவேசமாக வினா தொடுத்தார்.

“இந்தியாவை பற்றியும், இங்குள்ள தலைவர்கள் குறித்தும் உங்களுக்கு என்ன தெரியும்?” என்றும் சஞ்சய் ராவத், ஒபாமாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

– பா. பாரதி