திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருநாளன்று, விழாவில் பங்கேற்கவும், தொடர்ந்து வரும் பவுர்ணமி  கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகிய இந்த பஞ்சபூதங்களில் நெருப்பிற்கான ஸ்தலம் திருவண்ணாமலை. விஷ்ணுபகவானுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிவடிவாக காட்சி கொடுத்த ஸ்தலமே திருவண்ணாமலையாகும். இத்தலம் தென்கயிலாயம், சோணமலை, சிவலோக நகர், முத்தி நகர், அண்ணாமலை, அருணாசலம் எனப் பலவாறாக போற்றப்படுகிறது. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. சமயக்குரவர் நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இங்கு மலையே இறைவனின் சொரூபம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்  கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்திபெற்றது, 12 நாட்கள் நடைபெறும் .  தீபத் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்தாவது நாளன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும். இதனைக் காண திருவண்ணாமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொள்வார்கள். தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த ஆமுண்டு கார்த்திகை தீபத் திருவிழாவானது 17.11.2020 அன்று தொடங்குகிறது. முதல்நாள்  தூர்க்கை அம்மன் உற்சவத்தில் தொடங்கி 3.12.2020 அன்று சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது. அதையடுதது,  வரும் 20ம் தேதியன்று கொடியேற்றப்படும். அதனை தொடர்ந்து 10-ம் நாள் 29.11.2020 அன்று கோவில் வளாகத்தினுள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
இந்த நிலையில்  கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருநாளன்று கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.  மேலும் தீபத் திருவிழாவின் பரணி தீபம் மற்றும் மகாதீபம் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன்படி,  தீபத்திருவிழாவின் போது 29ம் தேதி நடைபெறும் தீபத் திருநாள் தவிர, நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை தினந்தோறும் சுமார் 5000 பக்தர்களுக்கு சவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். 
கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, முறையான அனுமதிச் சீட்டு பெற்ற பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தீபத் திருநாளன்று அண்ணாமலையார் மலை மீது ஏறி மகாதீபத்தினை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
29.11.2020 அன்று பொதுமக்கள், பக்தர்கள் கோவிலில் உள்ளே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
இந்த நிகழச்சிகள் அனைத்தும், தொலைகாட்சி, யூடியூப், திருக்கோயில் இணையத்தளம், அரசு கேபிள் தொலைகாட்சி மற்றும் உள்ளூர் தொலைகாட்சிகள் மூலம் ஒளிப்பரப்பாகும்.
தீபத் திருவிழா நாட்கள் மற்றும் அதனை தொடர்ந்து வரப்போகும் பவுர்ணமி நாளன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை.  கிரிவலப் பாதை மற்றும் நகரப் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தடை.
இந்த வருட தீபத் திருநாளன்று 28.11.2020 முதல் 30.11.2020 வரை சிறப்பு பேருந்துகள் வசதி கிடையாது.
இவ்வாறு  ஆட்சியர் தெரிவித்துள்ளது.