சென்னை: மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு, சென்னையில் அனைத்து இறைச்சிக் கூடங்களும் 15–ந்தேதி அன்று மூடப்பட வேண்டும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற 15–ந் தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
இதேபோல், ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, அரசு உத்தரவின்படி கண்டிப்பாக 15–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழுவதும் அனைத்து இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.