பாட்னா: நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் 7லட்சம் பேர் நோட்டாவுக்கு, அதாவது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர். இது மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பை மக்கள் வெளிப்படுத்தி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணி மட்டுமின்றி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும், ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் ஒரு அணியாகவும் போட்டியிட்டன.
வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், கடந்த 10ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக மற்றும் நிதிஷ்குமார் கூட்டணியான தேசிய ஜனநாயக கூ கூட்டணி 125 இடங்களில் வெற்றிபெற்றது. இதனால் நிதிஷ்குமார் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளார். இருந்தாலும், அவரது கட்சி தேர்தலில் பெரும் பின்னவை சந்தித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதேவேளையில் முதன்முறையாக பாஜக பெரும் வெற்றிபெற்றுள்ளது.
இந்த தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 122 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 121 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் பாரதிஜனதா கட்சி 74 இடங்களை கைப்பறி உள்ளது. ஆட்சி செய்து வரும் கட்சியான ஜேடியு வெறும் 43 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. அவரது கட்சி வாக்குகளை சிராக் பஸ்வான் பிரித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கட்சியின் கூட்டணியில் உள்ள இந்துஸ்தான் அவா மோர்ச்சா 4 இடங்களையும், விகாஷீல் இனசான் கட்சி 4 இடங்களையும் கைப்பற்றி உள்ளது. இதனால் மொத்ததில் 125 இடங்களை பிடித்து, ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
அதாவது சட்டமன்ற தேர்தலில் 7.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இதன் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் வாக்குப்பதிவு சுமார் 50 முதல் 55 சதவிகிதம் அளவுக்கே பதிவானது. இதில், 1.69 பேர் நோட்டாவுக்கு தங்களது வாக்குகளை செலுத்தி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 45சதவிகித வாக்காளர்கள், வாக்குகளை செலுத்தவே விரும்பவில்லை என்பதும் தெளிவாகி உள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சி 23.01 சதவிகித வாக்குகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளது. லாலு சிறையில் உள்ள நிலையில், அவரது மகன் தேஜஸ்வி தலைமையில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை ராஷ்டிரிய ஜனதாதளம் எதிர்கொண்டது. அதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தை பாஜக பிடித்துள்ளது. அதாவது 19.5 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது. ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. நிதிஷ்குமார் கட்சி 15.4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இதன் காரணமாக நிதிஷ்கட்சி மக்களிடையே செல்வாக்கு இழந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
பெரும் நம்பிக்கையுடன் களம் இறங்கிய காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் மேலும் சறுக்கலையே சந்தித்துள்ளது. மோடி, நிதிஷ் கூட்டணி குறித்து ராகுல்காந்தி கடுமையான விமர்சனங்களை எடுத்து வைத்தும், பீகாரின் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை மக்களிடையே எடுத்துக்கூறி வாக்குகள் கேட்டும், மக்களால் காங்கிரஸ் கட்சி மீண்டும் நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது வெறும் 9.5 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
தனித்துப்போட்டியிட்ட மறைந்த மத்தியஅமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் கட்சியான லோக்ஜனசக்தி, பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தலைமையில் தனித்து போட்டியிட்டு,ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றினாலும், 5.7 சதவிகித வாக்குகளை பிடித்துள்ளது.
கட்சிகள் பெற்றுள்ள வாக்கு சதவிகிதங்கள் இவ்வாறு இருந்தாலும், ஆட்சியை கைப்பற்றியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் எதிர்க்கட்சி கூட்டணியின் வாக்குகளில் ஒட்டுமொத்த வித்தியாசம் வெறும் 0.2 சதவீதம் மட்டும்தான். நூலிலையில்தான் தேஜஸ்வி யாதவ் ஆட்சியை பறிகொடுத்துள்ளார். ‘
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இதுவரை இல்லாத வகையில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது., 43 இடங்களை மட்டுமே கைப்பற்றி 64,84,414 வாக்குகளைப் பெற்றது.
முன்னாள் முதலமைச்சர் ஜிதான் ராம் மஞ்சியின் எச்.ஏ.எம் கட்சி 4 இடங்களை கைப்பற்றி 3,75,564 வாக்குகளைப் பெற்றது.
முகேஷ் சாஹ்னியின் வி.ஐ.பி கட்சி 6,39,342 வாக்குகளைப் பெற்றார்.
75 இடங்களைப் பெற்று அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக மாறிய ராஷ்டிரிய ஜனதா தளம் 96,63,584 வாக்குகளைப் பெற்றது.
சிபிஐ-எம்எல் – 11 இடங்களை வென்ற ஓரங்கட்டப்பட்ட இடதுசாரிக் கட்சி – 12,50,869 வாக்குகளைப் பெற்றது.
சிபிஐ அவர்கள் வென்ற இரண்டு இடங்களுக்கு 3,49,489 வாக்குகளையும், சிபிஎம் – மூன்று இடங்களுக்கு 3,56,855 வாக்குகளையும் பெற்றது.
அதுபோல, ஜேடியு பாஜக கூட்டணிக்கு எதிராக களமிறங்கிய முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகூட்டணி 110 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதனால், தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால், லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட பல கட்சிகள் இணைந்து மகாபந்தன் கூட்டணியாக களத்தில் இறங்கியும், எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
மகாபந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 19 இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் 16 இடங்களிலும் வென்றன. மொத்தம் 110 இடங்களில் இக்கட்சிகள் வென்றுள்ளன. 144 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதாதளம் 75 இடங்களை கைப்பற்றி தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஆனால், 70 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலயில் வெறும் 19 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்துள்ளது. கடந்த தேர்தலில் 27 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சியால் இம்முறை 19 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதுவே தோல்விக் காரணமாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் இவ்வாறு வெளியாகி இருந்தாலும், நோட்டாவுக்கு விழுந்துள்ள வாக்குகள் அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன. அதாவது சுமார் 7 லட்சம் பேர், நோட்டாவுக்கு வாக்களித்து, தாங்கள எந்தவொரு அரசியல் கட்சியையும் விரும்பவில்லை என்பதை தைரியமாக தெரிவித்து உள்ளனர்.
நோட்டா – NOTA – ஆங்கில சொல்லின் விரிவாக்கம் None of The Above என்பதாகும். இதன் பொருள் “மேலே உள்ள எவரும் அல்ல” என்பதாகும். இந்த புதிய முறை கடந்த 2013ம் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் “நோட்டா” பொத்தானை வைக்கப்பட்டது. இந்த நோட்டா பட்டன் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடைசி பட்டனாக இடம்பெற்றிருக்கும். முதன்முதலாக கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற 5 சட்டமன்றத் தேர்தல்களில், இது முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது.
பொதுமக்கள் தங்களது பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுபோட விரும்பவில்லை என்றால், தங்களது வாக்குகளை நோட்டாவுக்கு செலுத்தலாம். இதற்கான விழிப்புணர்களும் ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக நோட்டாவுக்கு விழுந்துள்ள வாக்ககள் மக்கள் எழுச்சியுடன் இருப்பதை வெளிக்காட்சி உள்ளது. பீகார் மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் நிலையில், அவர்களின் மனநிலை என்ன என்பதை நோட்டா வாக்குகள் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது.
பீகார் தேர்தலில் மொத்தம் 7,06,252 பேர் நோட்டாவுக்கு தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர். இது மொத்த சதவிகித அளவில் இருந்து, 1.69 சதவீதம் என்பது தெரிய வந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு பீகாரில் நோட்டாவுக்கு மட்டுமே 7லட்சம் பேர் வாக்களித்துள்ளது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 7 லட்சம்பேரின் வாக்குகள் கட்சிகளுக்கு கிடைத்திருந்தால், அங்கு ஆட்சியே மாறியிருக்க வாய்ப்பு உண்டு என்பதையும் மறுக்க முடியாது.
சமீபகாலமாக அரசியல் கட்சியினிரின் தனிமனித தாக்குதல்கள், மக்கள் பணியில் மெத்தனம், ஜாதி, இன ரீதியிலான மோதல் போக்கு, கடுமையான விமர்சனங்கள் போன்றவை மக்களின் மனநிலையை மாற்றி வருவது, பீகார் தேர்தல் முடிவில் தெரிய வந்துள்ளது. இனிவரும் தேர்தல்களிலும் நோட்டாவுக்கு விழும் வாக்குகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டுரையாளர்: ATSPandian