தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சாலையில் நின்று அரசு வேலைக்கேட்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் மனு வழங்கினார். இதை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்த 2 மணி நேரத்தில் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில், அரசுப் பணி வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். முதல்வரின் அதிரடி நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் நேரிடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு நடத்தியும், பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கலும் நாட்டினார்.

அதையடுத்து இன்று  காலை தூத்துக்குடியுல் ஆய்வு செய்ய, கார் மூலம் அங்கு சென்றார்.  அங்கே அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய சிகிச்சை கருவிகளின் செயல்பாட்டினை  தொடங்கி வைத்தார்.  பின்னர் காரில் புறப்பட்டுச்சென்றபோது, சாலையோரம் நின்ற ஒரு மாற்றுத்திறனாளி பெண் கையில் ஒரு கவருடன் முதல்வரை நோக்கி வணங்கினார். இதை கண்ட முதல்வர் உடனே  காரை நிறுத்தச்சொல்லிவிட்டு அந்தப்பெண்ணை அருகேஅழைத்து அவரது குறையை கேட்டறிந்தார்.

அப்போது, அந்த பெண் , தனது பெயர் மாரீஸ்வரி என்றும், தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் என்றும், தனது கணவர் கூலித்தொழிலாளியாக இருக்கிறார். அவரின் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியவில்லை. தனக்கு ஏதாவது அரசு வேலை கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று கண்ணீர் மல்க கூறி, மனுவை முதல்வரிடம் ஒப்படைத்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர், அந்த பெண்ணிடம் வேலைகிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதிக்கூறினார். இதையடுத்து  மாற்றுத்திறனாளி பெண்ணான  மாரீஸ்வரியும் வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து,  மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய முதல்வர், மனு கொடுத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் வேலை வழங்குவதற்கான உத்தரவை தயாரிக்கும்படி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், மனு கொடுத்துவிட்டுவீடு திரும்பிய மாரிஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில்  புற ஆதார முறையில் வார்டு மேலாளர் பணி ஆணை வழங்கி உத்தரவு  காத்திருந்தது.  கூடவே அவரை அழைத்து வரும் பணிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, முதல்வரின் அழைப்பின் பேரில் உடனே சென்ற மாரிஸ்வரிக்குமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பணிக்கான உத்தரவை வழங்கினார். பணி ஆணையை பெற்றுக்கொண்ட அந்தபெண்   கண்ணீர் மல்க நன்றி சொன்னார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் முதல்வருடன் உடனிருந்தனர்.

அதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 328.66 கோடி மதிப்புள்ள 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், ரூபாய் 22.37 கோடியில் நிறைவுற்ற 16 திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் ரூபாய் 37.55 கோடிக்கு வீட்டு மனைப்பட்டா, இரு சக்கர வாகன மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

சாலையோரத்தில் காத்து நின்ற பெண்ணின் மனுவை பெற்று 2 மணி நேரத்தில் வேலைக்கான உத்தரவை கொடுத்த முதல்வரின் நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீப காலமாக மருத்துவ இடஒதுக்கீடு உள்பட பல நிகழ்வுகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களிடையே நலல வரவேற்பை பெற்றுள்ளது.