சென்னை: தமிழக அரசுபள்ளிகளில் படித்த மாணாக்கர்கள் 851 பேர் நடப்பாண்டில் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.

நீட் தேர்வு காரணமாக தமிழக அரசு பள்ளிப் மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர இயலாத சூழலில் தமிழகஅரசு, அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு நீட் கோச்சிங் கொடுப்பதுடன், அவர்கள் மருத்துவம் பயிலும் வகையில் 7.5 இடஒதுக்கீட்டையும் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டில் 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணாக்கர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி இருப்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும். இதற்கு காரணமாக விளங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவு நீட் தேர்வின் பறிபோன ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் மூலம் நனவாகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் மருத்துவராகும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. இதன்மூலம் 300-க்கும் மேற்பட்ட ஏழை பிள்ளைகள் மருத்துவ படிப்பில் சேருகிறார்கள்.
இதுவரையில் 851 பேர் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று சென்றுள்ளனர். பெறாதவர்களும் ஓரிரு நாட்களில் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 12-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரையில் 32 ஆயிரம் மாணவர்களுக்கு மேலாக விண்ணப்பித்து உள்ளனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
தமிழகஅரசு நடப்பாண்டில் கொண்டுவந்துள்ள 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு சட்டம் காரணமாக, அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் 300 பேருக்கு மருத்துவ படிப்பு படிக்கும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டில், அரசு பள்ளியில் படித்த 747 மாணாக்கர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இது தவிர கடந்த வருடம் படித்த மாணவர்கள் 113 பேர் மீண்டும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 851 பேர் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]