நாகை: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக நாகையைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இடையில் சில மாதங்கள் இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்கி உள்ளது. மீனவர்களை கத்தி முனையில் விரட்டி அடிப்பதும், படகுகளை சேதப்படுத்தி நாசமாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் இலங்கை நீதிமன்றம், எல்லை மீறியதாக கூறி பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 121 படகுகளை அழிக்க உத்தரவிட்டது. இதற்கு, தமிழகத்தில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பிரதமர் மோடி தலையிட்டு தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கி உள்ளது. நேற்று முதினம் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த நிலையில், ற்றபோது, நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.