சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு  மேலும் 2 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அவரது பரோல் காலம் வரும் 23–ந் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சென்னை மத்திய சிறையில் கடந்த 28 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக்குறைவு காரணமாக,  90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி பேரறிவாளன் கடந்த அக்டோபர் 9 ம் தேதி பரோலில் வெளியே வந்து சொந்த ஊரில் வசித்து வருகிறார்.   அவரது பரோல் காலம் வரும் 9 ம் தேதியோடு முடிவடைவதால், மேலும் 30 நாட்கள் பரோல் வழங்க அனுமதி கேட்டு, அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்..

இந்த மனுமீது  நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரறிவாளனுக்கு மேலும்,  மருத்துவ சிகிச்சை தொடர வேண்டியுள்ளதால் அதனை கருத்தில்கொண்டு பரோலை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதை ஏ  ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பேரறிவாளனின் பரோலை, மேலும் வரும் 23ஆம் தேதி வரை (இரண்டு வாரங்களுக்கு ) நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.