சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை தொடங்க இருந்த வெற்றிவேல் யாத்திரை அனுமதி குறித்து தமிழகஅரசு முடிவு எடுக்கலாம் என உத்தரவிட்ட நீதிமன்றம், தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைத்தது.
தமிழகத்தில், இந்துக்களுக்கு எதிரான செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக தமிழ்க பாஜக வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் யாத்திரை நடத்துவதாக அறிவித்தது. அதனப்டி, நாளை திருத்தணியில் தொடங்கும் யாத்திரை டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திமுக, விசிக உள்பட பல அரசியல் கட்சிகள் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கின் இன்றைய விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் நடைபெற்றது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து காரசாரமாக நடைபெற்ற வாதங்களைத் தொடர்ந்து, வெற்றிவேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம் என்றும், மாநில அரசு இரு விண்ணப்பங்கள் மீதும் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், தடை கோரிய மனு மீதும் அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தடை கோரிய இரு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.