மத்திய அமைச்சராக இருந்த நடிகர் சத்ருகன் சின்ஹா கடந்த மக்களவை தேர்தலின் போது ,பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
பீகார் மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அவரது மகன் லவ் சின்ஹா போட்டியிடுகிறார்.
இந்நிலையில் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் சத்ருகன் சின்ஹா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
“பீகாரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நமது பிரதமர் மோடி, உள்ளூர் பிரச்சினைகளான வேலைவாய்ப்பு, வளர்ச்சி, விவசாயிகள் நலன் குறித்து பேசுவார் என நினைத்தால் முத்தலாக், அரசியல் சட்டத்தின் 370 பிரிவு, சீனா ஆகிய விவகாரங்கள் குறித்து பேசுகிறார்” என சின்ஹா நக்கலாக கூறினார்.
“பீகாரில் பிரதமர் மோடி பேசும் பொதுக்கூட்டங்களுக்கு லாரிகளிலும், பேருந்துகளிலும் ஆட்களை திரட்டி வருகிறார்கள். ஆனாலும் மோடி நிகழ்ச்சிகளில் கூட்டம் குறைவாகவே உள்ளது” என அவர் குறிப்பிட்டார்.
“ஆர்.ஜே.டி.தலைவர் தேஜஸ்வி யாதவை விமர்சனம் செய்வோர், ஓட்டு எண்ணப்படும் 10-ம் தேதி மவுனிகளாகி விடுவார்கள்” என்று தெரிவித்த சத்ருகன் சின்ஹா, “இந்த தேர்தலில் காங்கிரஸ் – ஆர்.ஜே.டி. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெஹா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” என்று ஆருடம் தெரிவித்தார்.
– பா.பாரதி