லிவர்பூல்
இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் நகரில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்துள்ளதால் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சோதனை நடக்க உள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி உள்ளது. குறிப்பாக லிவர்பூல் நகரில் அதிக அளவில் பரவல் உள்ளது. இந்நகரில் மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நகரில் இதையொட்டி கொரோனாவை கட்டுப்படுத்த வசதியாக கொரோனா சோதனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த திட்டத்தின்படி நகரில் உள்ள அனைவருக்கும் அதாவது அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த சோதனைகள் நடைபெற உள்ளன. இதையொட்டி இந்நகரில் வியாழக்கிழமை முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது.
இதையொட்டி ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரின் உதவியுடன் நாடெங்கும் கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. இது குறித்து அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன், “இந்த சோதனையின் மூலம் பல்லாயிரம் பேருக்கு கொரோனா உள்ளது தெரிய வரும். அவர்களுக்கு அறிகுறி இல்லாததால் அவர்கள் நடமாடி மேலும் பலருக்குப் பரப்புவது தடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.