சென்னை: தமிழக அரசின் உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உடனே ‘அரியர்’ தேர்வு முடிவுளை வெளியிடுங்கள் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு தேர்வுத்தவிர மற்ற தேர்வுகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், அரியர் மாணவர்களும், தேர்வுக்கு பணம் கட்டியிருந்தால், அவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவித்தது. ஆனால், பொறியியல் படிப்பில் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கேட்டு வழக்கு தொடரப் பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளது. ஆனால், சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களின் தேர்வுமுடிவுகளை வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், அனைத்து பல்கலைகங்களும், அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளும் ‘அரியர்’ தேர்வு முடிவுகளை, விரைவில் அறிவிக்கும்படி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. .அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் என, அனைத்திலும், முதுநிலை படிப்புக்கு மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளதால், இளநிலை முடிவுகளை வெளியிட உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘ஆல் பாஸ்’ முடிவில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகளை, முதுநிலை படிப்பில் சேர்க்கவும், கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, மாணவர் சேர்க்கையை, நவம்பர் முழுதும் நடத்த, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.