சென்னை: நவம்பர் 4-ஆம் தேதி முதல் 4 நாட்கள் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் 28ந்தேதியுடன் தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து விலகி, 29ந்தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கியுள்ளது. பருவமழை தொடங்கிய முதல்நாளே சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. மேலும், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டலச் சுழற்சி காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில், நவம்பர் 4-ஆம் தேதி முதல் சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுபோல தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும், நவம்பர் 4ந்தேதி முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில், மேற்கு தமிழ்நாடு, கேரளத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று இரவு மதுரையில்பெய்த கனமழையின், அளவு 102 மிமீட்டரை தாண்டி உள்ளது. இது மதுரையில் முதல் சென்சுரியாக பதிவாகியுள்ளது. இதையடுத்து விரகனூரிலும் 102 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரத்தில் 71 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இன்று முதல் தமிழகத்தின் மேற்கு பகுதிகளுக்கு மழை குறையும். மேற்கு தமிழகமான கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு மழை பெய்ய வேண்டுமானால் அரபிக் கடலில் கிழக்கு திசை காற்று உருவாகும். காற்றின் திசை இல்லாவிட்டால் மேலடுக்கு சுழற்சி நிலவும். அதுவும் இல்லாவிட்டால் காற்றின் திசை மாறுப்பட்டு இடியுடன் கூடிய கனமழையை கொடுக்கும்.
மேலடுக்கு சுழற்சி வட தமிழக கடலோரம் அல்லது மத்திய வங்கக் கடலில் நிலவினால் கடலோர பகுதிகளுக்கு நல்ல மழை பெய்யும். கேரளாவுக்கும் நல்ல மழைப் பொழிவை கொடுக்கும். வரும் காலங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
இலங்கை கடலோரத்தில் தென்மேற்கு பகுதியில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் 100 கி.மீ. தூரம் வரை உள்ள மாவட்டங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலோர தமிழகம், டெல்டா மாவட்டங்கள் ஆகிய இடங்களில் நவம்பர் 4-ஆம் தேதி முதல் மழை பெய்யும். இந்த மழை 4 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளவர், இந்த மழையானது புதுவை, காரைக்கால், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.