வேலூர்: நாடு முழுவதும் வெங்காயம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், தமிழகஅரசு, வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, அரசின் பசுமை பண்ணை கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
அதன்படி, மகாராஷ்டிராவில் இருந்து 5.5 டன் வெங்காயம் காட்பாடி கூட்டுறவு பண்டகசாலைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளது. இந்த வெங்காயம் இன்று வந்து இறக்கியது. அவை ஒரு நபருக்கு இரண்டு கிலோ அளவில், விலை ரூ.45க்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, வடகர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப் பட்டது. சென்னை உள்பட தமிழகத்தில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ஐ தாண்டியும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 180 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக தேவையை கருத்தில்கொண்டு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை வியாபாரிகள் இறக்குமதி செய்து வருகின்றனர். இந்த நிலையில், மத்தியஅரசு, ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், அதிகரித்துவரும் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்கிறது. நபர் ஒன்றுக்கு 2 கிலோ வெங்காயம் வழங்கப்படுகிறது. இதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.
அதன் ஒருபகுதியாக வேலூர் கூட்டறவு பண்டகசாலைக்கு 5.5 டன் வெங்காயம் வந்துள்ளது.