வாஷிங்டன் :
“கொரோனா தொற்றுநோயை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை”
“கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை” என்கிறார் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ்.
தொற்றுநோயை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த மார்க் மெடோஸ், “இது காய்ச்சல் போன்ற ஒரு தொற்று வைரஸ் என்பதால் இதனை கட்டுப்படுத்த முடியாது” என்று கூறினார்.
இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் உதவியாளர்களிடையே வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் மார்க் மெடோஸின் இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம், பயனளிக்கக் கூடிய சிறந்த சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை அறிமுகப்படுத்துவதில் டிரம்ப் அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக கூறினார்.
சனிக்கிழமையன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில், துணை அதிபர் மைக் பென்ஸ் அலுவலக தலைமை அதிகாரியான மார்க் ஷார்ட் உள்ளிட்ட பண்ணிரெண்டிற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருப்பதாக கூறிய மெடோஸ். இதனால் பென்ஸ், பிரச்சாரத்தை கைவிடவோ அல்லது குறைக்கவோ போவதில்லை என்றும் தெரிவித்தார்.
மருத்துவர்கள் அறிவுரையின்படி, ஞாயிற்றுக் கிழமையன்று வட கரோலினாவில் நடைபெற்ற கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து பங்கேற்றதை போல், அனைத்து பிரச்சாரத்திலும் துணை அதிபர் பங்கேற்பார் என்றும் கூறினார்.
பென்ஸின் இவ்வகையான பிரச்சாரம், அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அத்தியாவசிய பணிகளுக்கான வழிகாட்டுதல்களை மீறுவதாக அமையாதா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த மெடோஸ், “அவர் பிரச்சாரம் மட்டுமல்ல, அவரது வேலையையும் செய்கிறார்,” என்று கூறினார்.
“தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் மற்றும் பிற கட்டுப்பாட்டு முறைகள் குறித்த உண்மையை கட்டுப்படுத்த நாங்கள் முயற்சிசெய்து வருகிறோமே தவிர, தொற்றுநோயை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை, ஆனால் அதற்கு முயற்சித்து வருகிறோம்” என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
அதிக பரிசோதனைகளை மேற்கொள்வதால் தான் அமெரிக்காவில் பாதிப்பு அதிகமாக உள்ளது – டிரம்ப்
அதிபர் டிரம்ப் தனது பங்கிற்கு, நியூ ஹாம்ப்ஷயரில் தனது ஆதரவாளர்களை அணிதிரட்டி, மைனேயின் லெவண்டில் உள்ள ஒரு பழத்தோட்டத்தை பார்வையிட்டார், இதில் அவரது ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர், அங்கு அவர் ஆட்டோகிராஃபில் கையெழுத்திட்டார் மற்றும் நவம்பர் 3-ம் தேதி ஒரு “சிவப்பு அலை” வரப்போவதாக, அவர்களுக்கு உறுதியளித்தார்.
வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் விழா போன்று மாறுவேடம் அணிந்து வந்த குழந்தைகளுக்கு விருந்தளித்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்ட அதிபர் டிரம்பும் அவரது மனைவி மெலனியா ட்ரம்பும் இந்த வார பிரச்சார நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்.
முன்னதாக பழத்தோட்டத்தில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை அதிபர் பென்ஸ் பிரச்சாரம் மேற்கொள்வதை கைவிட வேண்டுமா ?” என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “அதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.
நியூ ஹாம்ப்ஷயரின் லண்டன்டெரியில் பிரச்சாரம் செய்த டிரம்ப், “தொற்றுநோய்களின் விகிதம் அதிகரித்து வருவது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை” என்றார். “அமெரிக்காவில் ஏன் இவ்வளவு பாதிப்புகள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கூட்டத்தைப் பார்த்து கேள்வி எழுப்பிய டிரம்ப் “ஏனென்றால் நாம் அதிக பரிசோதனைகளை மேற்கொள்கிறோம்” என்று கூறி அசத்தினார்.
மேலும், “நாங்கள் சகஜ வாழ்க்கையை விரும்புகிறோம், சகஜ வாழ்க்கை மீண்டும் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறோம்,” என்று கூறினார்.
தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த டிரம்ப் தனது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
திங்களன்று பென்சில்வேனியாவில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் டிரம்ப், அதே நாளில் மினசோட்டாவிலும் செவ்வாயன்று வட கரோலினாவிலும் பிரச்சாரம் மேற்கொள்ள விருக்கிறார் பென்ஸ், இதன்மூலம் டிரம்ப் அணியினர் முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளது தெளிவாகிறது.
டிரம்ப் உதவியாளரின் பேச்சு தோல்வியை ஒப்புக்கொண்டு சமாதான கொடியை ஆட்டுவது போல் உள்ளது – பிடென்
பிடென் தரப்பும் தனது பங்கிற்கு இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. தேவாலயம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியிலும், “வாக்களியுங்கள்” என்ற இணைய வழிப் பிரச்சாரத்திலும் பிடென் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மெடோஸின் பேச்சு “தோல்வியை ஒப்புக்கொண்டு சமாதானத்திற்கான வெள்ளை கொடியை” அசைப்பது போல் உள்ளது என்று கூறினார். மேலும், “தொற்றுநோய் பரவலின் தொடக்கம் முதல் டிரம்ப் நிர்வாகம் திறமையாக செயல்படவில்லை என்பதை அவரின் இந்த பேச்சு தெளிவுபடுத்துவதாகவும்” அறிக்கையொன்றில் பிடென் கூறியுள்ளார்.
விஞ்ஞானிகள் அறிவுறுத்தினால் மட்டுமே பொதுமுடக்கம் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ள பிடென். தான் தேர்ந்துடுக்கப்பட்டால், நாடு முழுவதும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் நடைமுறையை மேற்கொள்ளப்போவதாகவும் அதற்காக மாகாண ஆளுநர்களிடம் பேச இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தேவையற்ற பீதியை ஏற்படுத்துகிறார் பிடென் – பென்ஸ்
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சுமார் 86 லட்சம் அமெரிக்கர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் சுமார் 2,25,000 பேர் இறந்துவிட்டனர்; இவை இரண்டுமே உலகின் அதிக அளவாகும். அமெரிக்காவின் பாதி மாகாணங்கள் அக்டோபரில் அதிகபட்ச தினசரி தொற்று எண்ணிக்கையை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு பணிக்குழுவை வழிநடத்தும் துணை அதிபர் பென்ஸ் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், தனது தேர்தல் பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று வட கரோலினாவின் கின்ஸ்டனில் மழையில் நனைந்தபடி பேரணியுடன் மீண்டும் தொடங்கியதோடு, “இந்த உணர்வுபூர்வமான நேரத்தில், கொட்டும் மழையிலும் டிரம்புக்காக அணிதிரள்வோம்” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
பென்ஸ் அலுவலக ஊழியர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேரடி பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் பென்ஸின் இந்த நடவடிக்கையை பலரும் குறை கூறி வருகின்றனர். பொது சுகாதார வல்லுநர்கள், பென்ஸின் நேரடி பிரச்சாரம் செய்வதற்கான முடிவு பொது அறிவை மீறிய செயல் என்று குற்றம் சாட்டினார்.
தனது அலுவலக ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று குறித்து எந்த சலனமும் காட்டாத பென்ஸ், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடன் “தேவையற்ற பீதியை ஏற்படுத்துகிறார்” என்று கூறினார்.
அதே நேரம், ட்ரம்புடன் ஞாயிற்றுக்கிழமை பயணித்த ஊழியர்கள் யாரும் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட எந்தவொரு நபருடனும் நெருங்கிய தொடர்பு கொள்ளவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
துணை ஜனாதிபதிக்கு ஒரு விதி, மற்ற சாமானிய மக்களுக்கு ஒரு விதி – கோஸ்டின்
தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வெள்ளிக்கிழமையன்று புதிய உச்சத்தை தொட்ட அமெரிக்கா, சனிக்கிழமையன்று ஒரே நாளில் 83,178 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரஸ் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் முழுமையாக செயல்பட துவங்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், டிரம்பின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்ற பிடெனின் குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பொருளாதாரத்தை முடக்குவதில் பிடென் உறுதியாக இருப்பதாக விமர்சனம் செய்யும் டிரம்ப் அணியினர், அதிபர் டிரம்ப், தடுப்பூசிகள் மற்றும் புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறிவருகின்றனர்.
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியின் பொது சுகாதார நிபுணரான லாரன்ஸ் கோஸ்டின், தனிமைப்படுத்துதல் தொடர்பான தனது பணிக்குழுவின் பரிந்துரைகளை துணை அதிபரான பென்ஸ் தாமே மீறுவதாகக் குறை கூறினார்.
“இது துணை ஜனாதிபதிக்கு ஒரு விதி, மற்ற சாமானிய மக்களுக்கு ஒரு விதி” என்பது போல் உள்ளது என்று கோஸ்டின் கூறினார்.
அமெரிக்கர்களின் இயல்பு வாழ்க்கையுடன் கலந்துவிட்ட தொற்றுநோய் ஒருபுறம் இருக்க, வேட்பாளர்களும் தங்கள் பங்கிற்கு தாங்கள் செய்வது சரியென்ற எண்ணத்துடன் மாறுபட்ட அணுகுமுறைகளை இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இதில் யாருடைய நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு என்பது நவம்பர் 3-ம் தேதிக்குப் பின் தான் தெரியவரும்.