வாஷிங்டன்
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. மரணமடைந்தோர் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பல உலக நாடுகளில் கொரொனா தடுப்பூசி பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை முழுப்பலன் அளிக்கும் தடுப்பூசி கண்டறியும் பணி முடிவடையவில்லை.
கடந்த மே மாதம் கொரோனா சிகிச்சைக்குச் சோதனை முறையில் ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த நிபந்தனைகளுடன் அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த மருந்து இந்த சோதனையில் வெற்றி கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதையொட்டி அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த முழு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இனி இந்த மருந்து வழங்கப்பட உள்ளது.