புதுடெல்லி: விமான நிறுவனங்கள் மற்றும் அதன் பயணிகளுடைய செலவைக் குறைக்கும் வகையில், இந்திய விமானப் படையானது, தான் ஒதுக்கிவைத்திருந்த வான்வழியில் 10% அளவிற்கு திறந்துவிட்டுள்ளது.
இதன்மூலம், சில வான்வழித் தடங்களில் பறக்கும் நேரம் மிச்சமாவதுடன், எரிபொருள் சேமிக்கப்படுவதுடன், பணமும் சேமிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நன்மைகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையினுடைய இந்த முடிவின் மூலம், இந்தியாவின் 1 டஜனுக்கும் மேற்பட்ட விமான வழித்தடங்களில் விமானங்களை இயக்கும் செலவில் ரூ.40000 வரை குறையும் என்று கூறப்படுகிறது. லக்னோ – ஜெய்ப்பூர் மற்றும் மும்பை – ஸ்ரீநகர் வான்வழிகள் இவற்றுள் அடக்கம்.
தற்போயை நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் பயணியர் விமானங்கள், இந்திய வான்பரப்பில் 60% ஐ மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு. இதர வான்வழிகள் வியூகப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. சில வழித்தடங்களில், பயணிகள் விமானங்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகதூரம் சுற்றிப் பயணிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.