சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் கடந்த 3 நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக அளிக்கப்பட்டு வந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பி உள்ளது. கொரோனா தொற்று இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், பல தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணிகளை மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், தமிழகஅரசின் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. தமிழக தலைமைச் செயலகமான கோட்டையிலு 100 சதவிகித பணியாளர்களுடன், அரசுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தலைமைச் செயலகத்தில் சுமார் 6500 ஊழியர்கள் பணிசெய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும், தலைமைச் செயலக பணியாளர்கள் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் வரை சுமார் 200 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் சார்பில், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில், கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் 50 சதவீத பணியாளர்களை மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், வாழ்வியல் நோயுள்ளவர்கள் ஆகியோருக்கு அலுவலகத்துக்கு வர விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மீண்டும் கடந்த 3 நாளில் 56 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது, தலைமைச் செயலக ஊழியர்களிடையே அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது.