அரியலூர்: நீட் தேர்வு காரணமாக, தனது கனவு படிப்பான மருத்துவம் படிக்க முடியாமல், தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் கனவை நிறைவேற்றும் வகையில், அவரது தங்கை சவுந்தர்யா மருத்துவம் படிப்பதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு செல்கிறார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் முக்கியமானது மாணவி அனிதா தற்கொலை விவகாரம். மத்தியஅரசு நீட் தேர்வை கட்டாயமாக்கியதால், பிளஸ்டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்திருந்தும் தமக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியும், அவருக்கு நீதி கிடைக்காத நிலையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அவரது தங்கை சவுந்தர்யா என்பவர் தற்போது அனிதாவின் கனவை நிறைவேற்றுவதற்காக மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு செல்கிறார் அவருக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அனிதாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரை இழந்திருக்க மாட்டோம் என்று தெரிவித்து வரும் நெட்டிசன்கள், அனிதாவின் தங்கைக்கும் மருத்துவம் படிக்க இந்தியாவில் இடமில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel