திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் மூன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அவினாசியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சிவகுமார், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

முகக்கவசம் அணியாமல் வந்த சிவகுமாரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரது பெயர், ஊர் ஆகிய விவரங்களை கேட்டதோடு ஜாதி பெயரையும் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகுமார், போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும் போலீசாருடன் நடந்த உரையாடலை தனது செல்போனில் படம் பிடித்த சிவகுமார், இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்த அவினாசி காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று போலீசார் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
மேலும், சிவகுமாரிடம் , ஜாதி பெயரை கேட்ட, பெருமாநல்லூர் காவல்நிலைய காவலர்கள் நடராஜ், வேலுச்சாமி ஆகிய இருவரையும் திருப்பூர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தும் ஆணையிட்டார்.
– பா.பாரதி