பாட்னா :
பீகார், மாநில முன்னாள் முதல்-அமைச்சரும், ஆர்.ஜே.டி. கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் ஜாமீன் கேட்டு ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

காய்பாசா கருவூலத்தில் இருந்து முறைகேடாக பணம் எடுத்த வழக்கில் லாலுவுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்த செய்தி அறிந்த ஆர்.ஜே.டி. தொண்டர்கள் குதூகலம் அடைந்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தில், லாலுவின் நகைச்சுவை இழையோடும் பேச்சை கேட்கும் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினர். ஆனால் அவர்கள் சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
காரணம்?
லாலு பிரசாத் யாதவ் மீது தும்கா கருவூல வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாது. லாலுவின் பிரச்சாரம் இல்லாமல், ஆர்.ஜே.டி. கட்சி சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும்.
ஜெயிலில் இருந்ததால், கடந்த மக்களவை தேர்தலிலும் லாலு பிரச்சாரம் செய்யவில்லை. அந்த தேர்தலில் ஆர்.ஜே.டி. கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
-பா.பாரதி