சென்னை:
மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
சமூகநீதியின்’ உறுதிமிக்க தூண் ஒன்று இன்று சாய்ந்து விட்டது; அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருந்த உயர்வான குரல் ஓய்ந்து விட்டது
மத்திய உணவு, குடிமைப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் நலன் பாதுகாப்பு அமைச்சரும், லோக் ஜனசக்தியின் நிறுவனரும், வாழ்நாளெல்லாம் சமூகநீதிப் போராளியாகத் திகழ்ந்தவருமான ராம்விலாஸ் பாஸ்வான் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு பெருந்துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்குத் திமுக, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவுடன் – சமூகநீதிக் களத்தில் – நெருங்கிய நட்பு பாராட்டி வந்த ராம்விலாஸ் பாஸ்வான் மறைந்த தலைவரின் உற்ற நண்பர் மட்டுமின்றி – அவர் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டவர். அதேபோல் என்னிடமும் மிகுந்த நெருக்கம் காட்டி – நேசம் பாராட்டியவர். எட்டு முறை மக்களவை உறுப்பினராகவும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவந்த அவர், இந்திய அரசியலில் பொன் விழா கண்டவர்.
ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்ததற்காக நெருக்கடி நிலைமையின் போது சிறையில் அடைக்கப்பட்டாலும் – நெஞ்சுரத்துடன் முழுக் காலத்தையும் சிறையில் கழித்த தியாக சீலர். மத்திய அமைச்சராகப் பணியாற்றிய காலங்களில் எல்லாம் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்தவர்.
மத்திய எஃகுத்துறை அமைச்சராக இருந்த போது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சேலம் இரும்பாலையைத் தனியாருக்கு விற்கும் முடிவினைக் கைவிட்டதோடு – அந்த ஆலையின் புதிய விரிவாக்கத்திற்கும், நவீனப்படுத்தவும், 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்ற முன்வந்தவர் என்பது நினைவில் நிற்கும் அவரது தமிழக நலன் சார்ந்த பணியாகும்.
சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக – அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்ற தகவல் அறிந்தவுடனே, டி.ஆர். பாலுவைஅனுப்பி, அவரது மகனும், லோக் ஜன சக்திக் கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வானை நேரில் சந்தித்து விசாரித்து – ராம்விலாஸ் பாஸ்வான் விரைவில் முழுமையான நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவிக்கச் செய்திருந்தேன்.
அவர் விரைவில் வீடு திரும்பி – சமூகநீதிக்காகவும் – அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைக் குரலாகவும் விளங்கி, தொடர்ந்து முன்னெப்போதும் போல் பாடுபடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் – அவர் மறைந்தார் என்று வந்த செய்தி பேரிடியாக என் இதயத்தைத் தாக்கியிருக்கிறது.
ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை இழந்து வாடும் அவருடைய அன்பு மகன் சிராக் பாஸ்வானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், தனது அமைச்சரவை சகாக்களில் அனுபவமிக்க ஒருவரை- மதச்சார்பற்ற மாமனிதர் ஒருவரை – இழந்திருக்கும் பிரதமருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் – அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.