கடலூர்
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 17 ஆம் தேதி அன்று பெரியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி கடலூரில் அண்ணா பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு புதுநகர் காவல்நிலைய காவலர் மூவர் மாலை அணிவித்துள்ளனர்.
அந்த மூன்று காவலர்களான ரஞ்சித் அசோக் மற்றும் ரங்கராஜ் ஆகியோர் இந்த புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றினார்கள். தற்போது இந்த மூவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடமாற்றத்துக்கும் மாலை அணிவிப்புக்கும் தொடர்பில்லை எனவும் நிர்வாக காரணங்களால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.