சென்னை: கூட்டணி தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியில் ஆளாளுக்கு கருத்து கூறுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல், மே மாதம் வாக்கில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்கள், கூட்டணிகள் தொடர்பாக ஆலோசனைகளை தொடங்கி, தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.
அதிமுகவின் தலைமையாக விளங்கிய ஜெ.மறைவுக்கு பிறகு, தனித்துவமான தலைவர் இல்லாமல் தள்ளாடி வரும் அதிமுகவும், கடந்த சில மாதங்களாக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த முடிவு எடுக்க முடியாமல் திண்டாடி வந்தது. நேற்று அதிகாரப்பூர்வமாக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று அறிவித்து, இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இது, அதிமுக மீண்டும் உடைந்து சிதறும் என எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், எடப்பாடி , ஓபிஎஸ் குறித்து மீண்டும் கடுமையான விமர்சனங்களை எழுந்துள்ளன. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளில் ஒன்றான பாஜகவும் அதிமுக தலைமை குறித்து விமர்சித்து உள்ளது.
பாஜக கை காட்டுபவர்கள் தான் ஆட்சியமைக்க முடியும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். அதுபோல, தற்போதைய எம்எல்ஏக்களே பாஜகவில் சேர விருப்பமாக உள்ளதாகவும் கூறி வெறுப்பேற்றி உள்ளார். அதுபோல, முன்னாள் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக கூட்டணியில் முதல்வர் குறித்து தற்போது அறிவிக்க தேவை இல்லை, தேர்தலின்போது அதை பார்த்துக்கொள்ளலாம் என்றும், திமுகவுடனும் கூட்டணி ஏற்படலாம் என கூறியிருந்தார். இது அதிமுக நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘கூட்டணி தொடர்பாக பாஜகவில் ஆளாளுக்கு கருத்து கூறுகிறார்கள் அதற்கெல்லாம் பதில் கூற முடியாது’ என்று காட்டமாக கூறியதுடன், கூட்டணியை மதிக்கும் கட்சி அதிமுக என்றார். மேலும், அதிமுக திமுக போல் இல்லை என்று கூறியவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூட்டணி கட்சியை அவன் இவன் என்று பேசினார் . அப்படி எல்லாம் எங்களால் பேசவோ, பதில் கூறவோ முடியாது’ என்றும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பம் திமுக. கொள்ளையடித்து தமிழகத்தை அதளபாதாளத்திற்கு தள்ளியது தான் திமுகவின் சாதனை.
இவ்வாறு அவர் கூறினார்.