பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 121 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ம் தேதி நடக்கிறது.
தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து, கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
இந் நிலையில் கூட்டணியில் பாஜகவுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஐக்கிய ஜனதா தளத்துக்கு 122 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 7 தொகுதிகள் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சாக்கு ஒதுக்கப்படுகிறது. பாஜகவுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் விகாஷ்ஹீல் இன்சான் கட்சிக்கான இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ராம் விலாஸ் பாஸ்வான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஜே.டி.யுவின் உதவியின்றி அவர் ராஜ்யசபா உறுப்பினர் ஆனாரா? இதை விட அவருக்கு வேறு என்ன செய்ய வேண்டும் என்று நிதிஷ்குமார் கூறினார்.