லக்னோ: கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படும், தலித் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என்று, தடயவில் அறிக்கை கூறுவதாக உ.பி. மாநில காவல்துறை தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மாநில அரசு, தடயவியல்துறை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், அந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று அந்த மாநில அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இறந்த பெண்ணின் உடற்கூறாய்வுகளை செய்த, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறை துறை, கொடுத்த அறிக்கையை, உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துடன் தாக்கல் செய்துள்ளது.
அதில், இளம்பெண்ணின் உடலில் பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான எந்த தடயமும் கண்டறியப்படவில்லை. கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் காயங்கள் மட்டுமே இருந்தன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பலியான பெண்ணின் குடும்பத்தார் மட்டுமே, அந்தப் பெண் பலாத்காரத்துக்கு உள்ளானதாகக் கூறி வரும் நிலையில், அப்பெண்ணின் உடற்கூராய்விலும் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.