ஹத்ராஸ் :
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு அருகில் இருக்கக்கூடிய ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவமும் இந்த வழக்கை கையாளும் விதமும் பல்வேறு சந்தேகங்களையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகிறது.
அதுமட்டுமல்ல, இதுகுறித்து யாரும் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசமுடியாத நிலையை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஏற்படுத்திவருவதுடன், இதுகுறித்து விசாரிக்கச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்றும் பாராமல் உ.பி. போலீசார் நெஞ்சை பிடித்து கீழே தள்ளியது, மக்களுக்காக குரல் கொடுக்கவருபவர்களின் ஜனநாயக குரல்வளையை நெருக்குவது போல் இருந்தது என்று நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் எழுந்தது.
தாழ்த்தப்பட்ட மக்களை தரக்குறைவாக நடத்தும் இந்த ஹத்ராஸ் நகரில் இருந்து தான் நாடு போற்றும் மிகப்பெரும் துறவிகள் உருவானார்கள் என்ற செய்தி தற்போது தெரியவந்திருக்கிறது.
ஹத்ராஸ் நகரில் தற்போது நான்கு இடங்களில் ரயில் நிலையம் உள்ளது, ஹத்ராஸ் சந்திப்பு, ஹத்ராஸ் சாலை, ஹத்ராஸ் கில்லா மற்றும் ஹத்ராஸ் நகர். சற்றேறக்குறைய 130 ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள ஹத்ராஸ் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஒரு நாள் யாசகம் செய்து வாழ்ந்துவந்த ஒரு துறவியை கவனித்த சரத் சந்திர குப்தா எனும் துணை ரயில் நிலைய அதிகாரி, அந்த துறவியை நெருங்கி நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என்று கேட்டதற்கு, நான் ஒரு வழிப்போக்கன், பிறர் கொடுக்கும் பொருளில் சாப்பிட்டு, மீதியிருக்கும் பணத்தில் ரயிலிலோ, மாட்டு வண்டிலியோ அல்லது நடந்தோ வெவ்வேறு ஊர்களுக்கு செல்வேன் என்றார்.
என்னுடன் வந்து தங்கிக் கொள்ளுங்கள் என்று அந்த துறவியை தன்னுடன் அழைத்து சென்றார் துணை ரயில் நிலைய அதிகாரி, ஓரிரு நாள் கழித்து அந்த துறவி தான் இங்கிருந்து செல்லப்போவதாக கூறினார். அப்போது சரத் சந்திர குப்தா தானும் தனது வேலையே ராஜினாமா செய்துவிட்டு உங்களுடன் வரப்போகிறேன் என்று கூறினார். அதற்கு அவரும் அவ்வாறே ஆகட்டும், இருப்பினும் நாம் இருவரும் செல்ல தேவையான பணத்தை இந்த ரயில் நிலையத்தில் உள்ள மற்ற தொழிலாளிகளிடம் யாசகம் பெற்றுவருமாறு கூறினார், சரத் சந்திர குப்தாவும் அதுபோலவே செய்தார்.
தான் அதிகாரியாக இருந்த இடத்திலேயே தனக்கு கீழ் வேலை செய்தவர்களிடத்திலேயே, யாசகம் பெற்று திரும்பிய அவரை, அகங்காரம் ஏதுமின்றி நடந்துகொண்டதால் துறவு மேற்கொள்ள தகுதியுடையவராக ஏற்றுக்கொண்டு தன்னுடன் அழைத்துச் சென்றார் அந்த துறவி அவர் வேறுயாருமல்ல நரேந்திரநாத் என்று அழைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் தான், ரயில் நிலைய அதிகாரியாக இருந்த சரத் சந்திர குப்தா தான் பின்னாளில் ராமகிருஷ்ண மடத்தை நிர்வகித்த சுவாமி சதானந்தா. இந்த தகவல் “கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள சீடர்கள் அருளிய சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை குறிப்பு” (The Life of Swami Vivekananda by Eastern and Western Disciples) என்ற புத்தகத்தில் உள்ளது.
அகங்காரத்தை விட்டொழித்து சந்நியாசி ஆக ஆனவர்கள் தோன்றிய இந்த ஊரில் தற்போது சந்நியாசி என்று கூறிக்கொண்டு அகங்காரத்துடனும் மக்கள் நலன் பற்றிய சிந்தனையும் இல்லாதவர்கள் அதிகரித்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.