சென்னை : தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு நடக்கிறது.

தமிழகத்தில் நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்காக 1 லட்சத்து60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பித்ததில், 1 லட்சத்து 15,088 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களுடைய சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 1 லட்சத்து 12,406 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 71,469 மாணவர்களும் 40,922 மாணவிகளும் மூன்றாம் பாலினத்தவர்கள் 15 பேரும் உள்ளனர்.

இதையடுத்து கடந்த  28ந்தேதி (செப்டம்பர்)  கலந்தாய்வில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 1 லட்சத்து 12,406 பேர்அடங்கிய தர வரிசைப் பட்டியல் வெளியானது. அதைத்தொடர்ந்து இன்றுமுதல் கலந்தாய்வு தொடங்குகிறது.
கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நடக்கிறது.
முதல்நாளான இன்று  ‘மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை நடக்கும். இன்றைய சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 2410 பேர் பங்கேற்க உள்ளனர்.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 8-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும்’.

நடப்பாண்டில் தனியார் கல்லூரி மேலாண்மை பிரிவில் இருந்து 27,476 இடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்ற 27 பொறியியல் கல்லூரிகள் நடப்பாண்டில் பங்கேற்கவில்லை.  அதேவேளையில் 8 புதிய கல்லூரிகள் கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ளன.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 2,682 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.