டில்லி
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்க ரூ.80,000 கோடி தேவை என்னும் சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் கூறியதை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் பணிகளில் பல உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபட்டுள்ளன. இதில் ஆக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் 2 மற்றும் 3 ஆம் கட்ட மனித சோதனை செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அதார் பூனாவாலா தனது டிவிட்டரில், ”இன்னும் ஒரு வருடத்தில் செலவழிக்க இந்திய அரசிடம் ரூ.80,000 கோடி உள்ளதா? ஏனெனில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வாங்கி அளிக்க அத்தனை செலவாகும். நாம் அடுத்து எதிர்கொள்ள வேண்டிய சவால் இதுவே ஆகும்” எனப் பதிந்தார். அவர் தனது டிவிட்டரில் பிரதமர் அலுவலகத்தையும் டாக் செய்திருந்தார்.
இதற்கு இன்று பதில் அளித்த இந்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன், ”அந்த டிவீட்டை பதிந்தவர் அடுத்த நாளே அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். ஆனால் மத்திய அரசைப் பொறுத்த வரை ரூ.80,000 கோடி என்னும் கணக்கை ஏற்கவில்லை. அரசின் தேசிய தடுப்பூசி நிபுணர்கள் குழு இதுவரை 5 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி உள்ளன.
இந்த ஐந்து கூட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி மற்றும் அதை அனைவருக்கும் அளிக்கத் தேவையான தொகை ஆகியவற்றை மக்கள் தொகை அடிப்படையில் முன்னுரிமை அடிப்படையிலும் ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ளது. அந்த கணக்குப்படி தேவையான பணம் அரசிடம் உள்ளது.” எனத் தெரிவித்தார்.
இது குறித்து ஆர் எஸ் எஸ் துணை அமைப்பான சுதேசி ஜாகரன் மன்ச் ஒருங்கிணைப்பாளர் அஸ்வனி மகாஜன், “இந்திய காப்புரிமை சட்டத்தின் பிரிவின்படி கட்டாய உரிமம் வழங்கி அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் அரசுக்கு இலவச விநியோகம் செய்ய வலியுறுத்த முடியும்” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஐநா சபை காணொளி கூட்டத்தில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான அனைத்து சோதனைகளும் விரைவில் வெற்றிகரமாக முடியும் எனவும் அதன்பிறகு அதிக அளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நடக்கும் எனவும் உறுதி அளித்திருந்தார். அதற்கு டிவிட்டரில் அதார் பூனே வாலா நன்றி தெரிவித்துள்ளார்.