கர்நாடக மாநிலத்தில் பரவி வரும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், மாநில அரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதற்கிடையில், பொதுமக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், முக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கூடுவதை தடுக்க தென்மேற்கு ரெயில்வேயும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ரயில்நிலையங்களில், வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளை வழியனுப்ப வரும் உறவினர்கள் கூட்டத்தை தடுக்க பிளாட்பாரம் டிக்கெட்டை ரூ.50 ஆக உயர்த்தி உள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் நின்று நடைமேடை (பிளாட்பாரம்) டிக்கெட் எடுப்பதை தவிர்க்க, இந்திய ரெயில் நிலைய வளர்ச்சி கழகம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி ‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி நடைமேடை டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் நுழைவுவாயில் பகுதியில் 2 கியாஸ்க் எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளது. அந்த எந்திரங்களில் ‘கியூ-ஆர்’ கோடு லேபிள் ஒட்டப்பட்டு உள்ளது.
பிளாட்பாரம் டிக்கெட் தேவைப்படுபவர்கள், கியூ- ஆர் கோடை ஸ்கேன் செய்து, பிளாட் பாரம் டிக்கெட் எடுக்கலாம்.
அதாவது ‘போன் பே’, ‘கூகுள் பே’, ‘பேடிஎம்’ உள்ளிட்ட செல்போன் செயலிகள் மூலம் தானியங்கி எந்திரங்களில் உள்ள ‘கியூ-ஆர்’ கோடை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தி நடைமேடை டிக்கெட்டை எடுத்து கொள்ளலாம்.