டில்லி
இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி ஊரடங்குக்குப் பிறகு மணிக்கு ரூ.90 கோடி வருமானம் பெறுவதாகக் கணக்கெடுப்பு கூறுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியல் ஒன்றை ஹுருன் இந்தியா ரிச் நிறுவ்னம் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் தொடர்ந்து 9 வருடங்களாக ரிலையன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனரும் தலைவருமான முகேஷ் அம்பானி இடம் பெற்று வருகிறார். அவருடைய சொத்து மதிப்பு 2,77,700 கோடியாக இருந்த்து தற்போது ரூ.6,58,400 கோடியாக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவுதலுக்குப் பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் அனைத்து செல்வந்தர்களுக்கும் பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக கடும் இழப்பு ஏற்பட்டது. இந்தக் கால கட்டத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 28% வீழ்ந்து ரூ.3,30,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. அதன் பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஃபேஸ்புக், கூகுள், சில்வர் லேக் போன்ற நிறுவனங்க்ள் முதலீட்டால் மதிப்பு வேகமாக அதிகரித்தது.
கடந்த நான்கு மாதத்தில் ரிலையன்ஸ் அதிபரின் சொத்துக்களின் மதிப்பு 85% உயர்ந்தது. கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்திலும் ரிலையன்ஸ் ப்ங்குக்ளின் சந்தை மதிப்பு கணிசமாக உயர்ந்தது. ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு சில நிறுவனப் பங்குக்ளின் மதிப்பு இந்த கால கட்டத்தில் இரு மடங்கு அதிகரித்தது.
தற்போது வெளியாகி உள்ள ஹுருன் இந்தியா ரிச் பட்டியலில் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானி உலக அளவில் 5 ஆம் இடத்தில் உள்ளனர். இவருக்கு அடுத்தபடியான ஐந்து இடங்களில் உள்ள செல்வந்தர்களின் மொத்த சொத்துக்களின் மொத்த மதிப்பும் இவரை விடச் சற்று குறைவாகவே உள்ளது. தற்போது முகேஷ் அம்பானியின் ஒரு மணி நேர வருமானம் ரூ. 90 கோடி ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.