சென்னை: தமிழகத்தின் கையாலாகாதனம் காரணமாக, தமிழகத்தில் நடைபெற்றுள்ள கிஷான் திட்ட முறைகேட்டில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 1234 பேர் பலன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில்தான அதிக அளவில் வெளிமாநில தொழிலாளர்களின் மூலம் முறைகேடு நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
“விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ‘பிரதம மந்திரி கிசான்’ திட்டத்தின் கீழ் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போலியான தகவல் கொடுத்து பதிவு செய்து, முறைகேடாக பணத்தை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூபாய் 110 கோடியை ‘போலி நபர்கள்’ கொள்ளையடிக்கத் துணை போன தனது ஆட்சியின் கையாலாகாதனம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
கொரோனா பேரிடர் காலத்தில் – விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை, அரசு நிர்வாகத்தின் மெத்தனம் காரணமாக லட்சகக்கணக்கான போலி பயனர்கள் பயன்பெற்றுள்ளதும், சேலம் மாவட்டத்தில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நபர்கள் பணம் பெற்றுள்ளதும் தெரிய வந்தது. அவர்களில், 1,000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் வட இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள், அவர்கள் மாநிலத்தில் எந்த விவசாய நிலங்களையும் சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.
முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததும் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசின் வேளாண் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி “இது 110 கோடி ரூபாய் ஊழல்” என்றும், “மார்ச் மாதத்தில் 39 லட்சமாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, திடீரென்று ஆகஸ்ட் மாதத்தில் 45 லட்சமாக உயர்ந்துவிட்டது” என்றும், அவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியிருந்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, இந்த முறைகேட்டுக்கு காரணம் மத்தியஅரசுதான் என்றும், அவர்கள் “தாமாகவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புதான் இதற்கு காரணம் என்றும் திசை திருப்பினர். பி.எம். கிசான் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மாநி அரசுக்குப் பொறுப்பே இல்லை என்பது போல தெரிவித்திருந்தார்.
ஆனால், இத்திட்டத்தின் கீழ், “பயனாளிகளை அடையாளம் காணுவது, அவர்களின் விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை உறுதி செய்வது, அவற்றை பி.எம். கிசான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது, அனைத்தும் முழுக்க முழுக்க அ.தி.மு.க. அரசின் வேலை. பதிவேற்றம் செய்யப்பட்ட பயனாளிகளில் 5 சதவீதம் பேரை நேரடியாக – அவர்களின் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி – அவர்கள் உண்மையான பயனாளிகளா எனக் கண்டுபிடிப்பதும் அரசின் கடமை” . ஆனால், அரசின் மெத்தனம் காரணமாக பயனாளிகள் யார் என்பதை குறித்து ஆய்வு செய்யாமல், முறைகேடு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அ.தி.மு.க. அரசின் வேளாண் துறை வெளியிட்ட அரசு ஆணை எண் 45, தேதி 13.2.2019ன்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரிகள் கிஷான் திட்டத்தை கண்காணித்து வரும் நிலையில், 6 லட்சம் போலி பயனாளிகள் இந்த நிதியைப் பெற்றுள்ளது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இதில் முதல்கட்டமாக, ராஜஸ்தான், ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த 1234 போலி பயனர்கள், தமிழகத்தில் கிஷான் திட்டத்தின் மூலம் பலன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் பணத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்து உள்ளது.
அதிகபட்சமாக சேலத்தில் வசித்து வந்த வெளிமாநிலங்களைச்சேர்ந்தவர்கள் என்றும் ஈடுபட்டு இருப்பதாகவும், கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்த புலம்பெயர்ந்தோர், முகவர்களால் கமிஷன் ஆசைக்காட்டி, அவர்களின் ஆவனங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கு அரசு துறைகளின் ஊழியர்களுடன் தொடர்பு கொண்டிருந்த இன்டர்நெட் சேவை மைய உரிமையாளர்களும் காரணம் என்றும், புலம்பெயர்ந்தோரை பண்ணை உரிமையாளர்களாகக் காட்டுவதற்காக போலி நில ஆவணங்களை பதிவேற்றி முறைகேடு நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டுள்ள போலி பயனாளிகளில் தங்களது சொந்த ஊர்களான ராஜஸ்தான், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு சென்றுவிட்ட நிலையில், அவர்களிடமிருந்து பணத்தை மீட்பது கடினமாகி இருக்கிறது என்றும் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.