சென்னை
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழுக் கட்டணம் வசூலித்ததாக 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்துள்ளது.
மாநிலம் எங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனல ஆனலைன் வகுப்புக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தனியார்ப் பள்ளிகளில் இதற்காகக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் உடனடியாக முழுக் கட்டணத்தைச் செலுத்துமாறு நிர்ப்பந்திப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
தமிழக அரசு இதையொட்டி தனியார்ப் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டது. ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தியது. இதனால் அந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ”சென்ற ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 70% வசூலித்துக் கொள்ளலாம். இதில் அரசு உதவி பெறாத பள்ளிகள் முன் கட்டணமாக 40% கட்டணத்தை ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்கலாம். மீதமுள்ள கட்டணத்தைப் பள்ளிகள் திறந்த பிறகு 2 மாதங்கள் கழித்து வசூலிக்கலாம்” என உத்தரவிட்டது. பிறகு இந்த காலக் கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது.
ஆயினும் ஒரு சில தனியார் பள்ளிகள் முழுக் கட்டணத்தைக் கேட்டு தொல்லை செய்வதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய பள்ளிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்தது. ஆயினும் இந்நிலை தொடர்வதாகக் கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
உயர்நீதிமன்றம், ”இதுவரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து வந்த 111 புகார்களில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. மொத்தம் 9 பள்ளிகளில் முழுக் கட்டணம் செலுத்த நிர்ப்பந்தித்துள்ளன. நீதிமன்றம் இந்த பள்ளிகள் மீது தானாகவே முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிந்துள்ளது. இப்பள்ளிகளின் தாளாளர்கள் வரும் அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.,