கன்னடத் திரைத்துறையில் போதை மருந்து கும்பல் குறித்து விசாரித்து வரும் மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினர், நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனர் ஆதித்யா அல்வாவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அவரைப் பிடிக்க கவன ஈர்ப்புச் சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா அல்வா மறைந்த முன்னாள் அமைச்சர் ஜீவ்ராஜ் அல்வாவின் மகன்.

போதை மருந்து தொடர்பாக நடிகை ராகினி வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது முதலே ஆதித்யா தலைமறைவாகிவிட்டார்.

ஆதித்யாவுக்குச் சொந்தமாக ஹவுஸ் ஆஃப் லைஃப் என்கிற நான்கு ஏக்கர் ரிசார்ட் உள்ளது. இதில்தான் ஆதித்யா பல்வேறு கன்னட நட்சத்திரங்களுக்காக வார இறுதியில் பார்ட்டிகளை நடத்தியுள்ளார். மேலும், போதை மருந்து விநியோகமும் நடந்துள்ளது. ஆதித்யாவுக்குச் சொந்தமான ரிசார்ட்டுகளில் சோதனை நடந்தது.

இவரோடு சேர்த்து ஷிவபிரகாஷ் சிப்பி என்பவரையும் காவல்துறை தேடி வருகிறது. ஆதித்யா இந்த வழக்கின் 6-வது குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.