மும்பை: கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின், 3வது கட்டமாக மனித சோதனைக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக அறிவித்து உள்ளது. அதன்படி, அக்டோபர் மாதம், பரிசோதனை தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளது.
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் உலக நாடுகள் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணியில் முழமூச்சாக இறங்கி உள்ளன.
இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமும், ஐ.எம்.சி.ஆர். எனப்படும் இந்திய மருத்து கவுன்சிலும் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த மருந்தை சோதனை செய்ய கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது.
இம்மருந்துகளை சோதனை நடத்த, நாடு முழுவதும் 12 பரிசோதனை மையங்கள் தேர்வு செய்யப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக கோவாக்சினை விலங்கு களுக்கு செலுத்தி நடைபெற்ற பரிசோதனையில் நல்ல பலன்கள் கிடைத்திருந்ததாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதைத்தொடர்ந்து, 2வது கட்டமாக, மனித சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக தமிழகத்தில் சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி உள்பட இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளும் சாதகமாகவே வந்துள்ளது.
‘இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்கள் 28 நாட்களை கடந்து நலமுடன் இருப்பதாகவும், 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்கள் உடலில் கோவாக்சின் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாக கடந்த 11ந்தேதி பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது.
இந்த தடுப்பு மருந்து SARS-CoV-2 வைரஸுக்கு எதிரான, இம்யூனோகுளோபின் – ஜி எனப்படும் நோய் எதிர்ப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் கிருமிகளை செயலிழக்க வைத்துள்ளது. மூச்சுக்குழாய், தொண்டை மற்றும் நுரையீரல் திசுக்களில் வைரஸ் கிருமி பெருகுவதையும் இது தடுத்துள்ளது. தடுப்பு மருந்து வழங்கப்பட்டவர்களுக்கு நிமோனியா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது 3வது கட்ட சோதனை செய்வதற்கு ஆயத்தமாகி வருகிறது. கோவாக்சின் 3வது கட்ட சோதனையை அக்டோபரில் தொடங்க பாரத் பயோடெக் திட்டமிட்டுள்ளது. இந்த சோதனையின்போது, நாடு முழுவதும் சுமார் 25,000 முதல் 30,000 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க பாரத் பயோடெக் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரத் பயோடெக்கின் தர இயக்கங்களின் தலைவர் சாய் பிரசாத், SARS-CoV2 இன் செயலிழந்த முழு விரியனை அடிப்படை யாகக் கொண்ட கோவாக்சின் கட்டம் -2 சோதனையில் உள்ளது. பாரத் பயோடெக் கட்டம் -1 ஐ முடித்து தரவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (டி.சி.ஜி.ஐ) சமர்ப்பித்துள்ளது. தற்போது, உயிர் பாதுகாப்பு பாதுகாப்பு நிலை (பிஎஸ்எல்) -3 வசதிகளில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது.
இதையடுத்து, 3வது கட்ட சோதனைக்கு திட்டமிட்டு உள்ளது. வரும் அக்டோபரில் சோதனை நடத்த உள்ளதாகவும், தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்கள் மூலம் கூட்டாளர் தளங்களில் கோவாக்சின் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பாரத் பயோடெக் நிறுவனம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.