சென்னை

மிழகத்தில் 6 நகரங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை தமிழக அரசு அமைக்க உள்ளது.

உலகெங்கும் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தியாளர்களுக்குப் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அனைத்து மாநிலங்களும் அதே அடிப்படையில் பல சலுகைகள் அறிவித்து வருகின்றன.

தமிழக அரசு சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு நகரங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைக்கத் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியைக் கோரி உள்ளது.  அத்துடன் அரசு அலுவலக வாகன நிறுத்துமிடங்களில் சார்ஜிங் செய்துக் கொள்ளவும் அனுமதி கோரி உள்ளது.   இந்த சார்ஜிங் நிலயங்கள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைய உள்ளன.

இவ்வாறு சார்ஜிங் நிலையம் மற்றும் மின்சார வாகன உபகரண தொழிற்சாலைகள் அமைப்போருக்கு அரசு 2025 டிசம்பர் 31 வரை 100% மின்சார வரி விலக்கு அளிக்க உள்ளது,  அத்துடன் மின்சார வாகனம் தொடர்பான பணிகளுக்கு நிலங்கள் வாங்கும் போது முத்திரை தீர்வைக்கு விலக்கு அளிக்க உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்னும் 10 வருடங்களில் ஆறு பெரிய நகரங்களில் ஆட்டோக்களை மின் வாகனமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.   இந்தப் பணிகள் மற்ற நகரங்களிலும் விஸ்தரிக்கப்பட உள்ளது.  அத்துடன் அனைத்து வாடகைக்கார்களையும் மின் வாகனமாக மாற்றத் தேவையான உதவி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ள தமிழக அரசு ஒவ்வொரு வருடம் 1000 மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தற்போது அரசு அறிவித்துள்ள மின் வாகன கொள்கையின் அடிப்படையில் மல புதிய நிறுவனங்கள் மின் வாகனம் மற்றும் அது தொடர்பான பொருட்கள் தயாரிக்க முன் வந்துள்ளன.  இதனால் இந்த தொழிலில் சுமார் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.   அத்துடன் பழைய பேட்டரிகளை மீண்டும் சார்ஜ் செய்ய அல்லது அழிக்கத் தேவையான உள்கட்டமைப்பு பணிகளுக்கும் அரசு முன்னுரிமை அளிக்க முன் வந்துள்ளது.